விவசாய நிலத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


விவசாய நிலத்தில் கலெக்டர் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கக்கூடாது என்று கூறி தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தென்காசி,

செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருணாசலத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- செங்கோட்டை அருகே உள்ள இலத்தூரில் ஒரு கட்டளைக்கு பாத்தியப்பட்ட சுமார் 140 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் அச்சன்புதூர், நெடுவயல், சிவராம பேட்டை, கொடிக்குறிச்சி, அனந்தபுரம், அச்சம்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

தற்போது தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிப்பு செய்ததால் நாங்கள் விவசாயம் செய்து வரும் இடத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக அதிகாரிகள் நில அளவை செய்து வருகிறார்கள். மேலும் விவசாயிகளின் முகவரிகளையும், செல்போன் எண்களையும் சேகரித்து வருகிறார்கள். இந்த விவசாய நிலங்களை ஆக்கிரமித்து அளவீடு செய்து வருகிறார்கள்.

எனவே இந்த நிலத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவார்கள் என்ற அச்ச உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கட்டினால் எங்களுக்கு வாழ்வாதாரம் பறிபோய்விடும். எனவே வருவாய்த்துறை நில அளவை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அருணாசலம் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story