தென்காசி அருகே, மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி
தென்காசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள அகரக்கட்டு தென்றல்நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கனகராஜ் (வயது 18). திருமணமாகாதவர். அதே பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ரமேஷ் (26). இவருக்கு திருமணமாகி சுபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சுபா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
கனகராஜூவும், ரமேஷூம் தொழிலாளர்கள். இருவரும் நேற்று மாலையில் தென்காசியில் இருந்து அகரக்கட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டினார். தென்காசி-ஆய்க்குடி சாலையில் ஆய்க்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த கனகராஜ், ரமேஷ் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story