மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 15 Oct 2019 4:45 AM IST (Updated: 15 Oct 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது என்று நாங்குநேரி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நெல்லை, 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

2-வது நாளான நேற்று தொகுதிக்கு உட்பட்ட ஏர்வாடி பஜாரில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, திறந்த வேனில் நின்று பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார் இதை விட பெரிய பதவிக்கு ஆசைப்பட்டு சென்று விட்டார். அவர் தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்து விட்டார். அவரது கட்சிக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளூர்காரர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நீங்கள் கொடுக்கும் மனுவை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து செயல்படுத்துவதில் வல்லவர். எனவே, அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தலை திணித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனிமேல் எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமாவை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

தி.மு.க. கூட்டணியில் மிட்டா, மிராசு, கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும். ஆனால், அ.தி.மு.க. வேட்பாளர் எளிமையானவர். இன்னும் 1½ ஆண்டு காலம் நாங்குநேரி தொகுதி மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்தால், உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு வராது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மறந்து பேசி வருகிறார். முதலில் அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள். அ.தி.மு.க.வின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் என்னை தேர்வு செய்ததால் முதல்-அமைச்சராக உள்ளேன். அவர் நான் பொய் சொல்வதாக கூறி வருகிறார். நான் பேசுவது அனைத்தும் உண்மை. மு.க.ஸ்டாலின் தான் பொய் சொல்லிவருகிறார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. பொய்யை திரும்ப திரும்ப கூறினால், உண்மையாகாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள்.

வெற்றி பெற்ற பிறகும் எதுவும் செய்யவில்லை. இதுபற்றி கேட்டால் நாங்கள் மேலேயும் ஆட்சிக்கு வர முடியவில்லை. கீழேயும் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று பதில் கூறுகிறார்கள். நீங்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் ஆசையை தூண்டி விட்டு வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால், அ.தி.மு.க. ஐ.எஸ்.ஐ. முத்திரை போன்ற உண்மையான இயக்கம். நாங்கள் உண்மையான வாக்குறுதிகளை மட்டும் கொடுத்தோம். டூப்ளிகேட் பொருட்கள் போன்றது தி.மு.க.

முஸ்லிம் மக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு உதவித்தொகையை நிறுத்தியபோது என்னை வந்து சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் ரூ.6 கோடி உதவித்தொகையாக ஒதுக்கி வருகிறோம். ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு 5,400 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்குகிறோம். முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையில் கொண்டு வந்த போது, அதற்கு எதிராக அ.தி.மு.க. ஓட்டுபோட்டது. பா.ஜனதாவின் பினாமி ஆட்சி என்று எங்களை கூறி வருகிறார்கள். நாங்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்கு அளித்தோம் என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மத்திய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க. எதிர்க்கும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஆனால் கொள்கையை மாற்றிக் கொள்ளும் ஒரே கட்சி தி.மு.க. மட்டும் தான்.

பா.ஜனதா, காங்கிரஸ் என மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வினர் மாறி மாறி இடம் பிடித்தனர். பச்சோந்தி கூட சிறிது நேரம் கழித்து தான் நிறம் மாறும். ஆனால் தி.மு.க. உடனுக்கு உடன் நிறம் மாறும் கட்சி ஆகும். ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது அந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு என்று எந்த திட்டத்தையும், நிதியையும் வாங்கிவரவில்லை. தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பதவிக்கு வந்த உடன் தி.மு.க. மக்களை மறந்து விடும். தங்களது குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொள்வார்கள்.

2ஜி அலைக்கற்றையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தது மட்டுமே தி.மு.க.வின் சாதனையாக உள்ளது. அ.தி.மு.க. ஊழல் கட்சி என்று கனிமொழி பேசி இருக்கிறார். ஊழலுக்காக சிறை சென்றவர் கனிமொழி. அவர் மீண்டும் சிறைக்கு செல்வார். தி.மு.க. திட்டமிட்டு இந்த ஆட்சி மீது குறை கூறி வருகிறது.

இந்த ஆட்சி அமைந்த உடன் 10 நாட்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால் இந்த ஆட்சி 2 ஆண்டுகள் 8 மாதங்கள் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதையும் முறியடித்தோம். அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தொண்டனை கூட உங்களால் அசைக்க முடியாது. மு.க.ஸ்டாலின் குறுக்குவழியில் கட்சியை உடைத்து ஆட்சியை பிடிக்க இப்படி செய்தார். அது ஒருபோதும் நடக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆசியோடு இந்த ஆட்சி நடந்து வருகிறது. இது தொண்டர்களால் வளர்ந்த கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி. எனவே, மு.க.ஸ்டாலினின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த லண்டனுக்கு சென்று உயர்தர டாக்டர்களுடன் பேசி ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளோம். ஆனால் மு.க.ஸ்டாலின் 4 மாதங்களுக்கு ஒருமுறை லண்டன் சென்று வருகிறார். அது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று அவரது குடும்பத்தினர் வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலினை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்க வைத்து இப்போது ஒரு வேனில் ஏற்றி பிரசாரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். மூத்த தலைவர்கள் எல்லாம் அவருக்கு கீழ் நிற்கிறார்கள். குடும்ப அரசியல் பற்றியே தி.மு.க.வினர் சிந்தித்து வருகிறார்கள். மக்கள் பற்றி அவர்கள் சிந்திக்கமாட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. ஜனநாயக கட்சி.

நான் விபத்தால் முதல்-அமைச்சர் ஆகிவிட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். 1987-ம் ஆண்டு நானும் எம்.எல்.ஏ., மு.க.ஸ்டாலினும் எம்.எல்.ஏ. தான். நான் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா 9 முறை எனக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு, தற்போது முதல்-அமைச்சர் ஆகி உள்ளேன். எங்களுடைய பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் தான் நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறேன். இது பெரும்பான்மையான அரசு.

ஜெயலலிதா வழியில் நாங்கள் இரவு-பகல் பாராமல் மக்கள் பணி செய்து வருகிறோம். வீடு இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. எனவே, தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிட இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஏர்வாடி பஜாரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, செண்டை மேளம், பூரண கும்ப மரியாதையுடன் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, பிரபாகரன், அமைச்சர் ராஜலட்சுமி, அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, பா.ம.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், த.மா.கா. மாநில செயலாளர் சார்லஸ், கிழக்கு மாவட்ட தலைவர் ஜோதி, ச.ம.க. மாநில துணை பொது செயலாளர் சுந்தர், பெருந்தலைவர்கள் மக்கள் கட்சி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story