“வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்” டி.கே.சிவக்குமாரின் மனைவி- தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீசு
டி.கே.சிவக்குமாரின் மனைவி, தாயார் வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
டி.கே.சிவக்குமார் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தார்.
இதற்கிடையே டி.கே.சிவக்குமாரின் மனைவி, தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியுள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதன் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா, சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி., லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.ராஜண்ணா மற்றும் டி.கே.சிவக்குமாரின் நெருங்கிய ஆதரவாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story