ராகுல் காந்தியின் பிரசாரத்தால் பா.ஜனதா, சிவசேனாவின் ஓட்டுகள் அதிகரிக்கும்; முதல்-மந்திரி பட்னாவிஸ் சொல்கிறார்


ராகுல் காந்தியின் பிரசாரத்தால் பா.ஜனதா, சிவசேனாவின் ஓட்டுகள் அதிகரிக்கும்; முதல்-மந்திரி பட்னாவிஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 15 Oct 2019 6:01 AM IST (Updated: 15 Oct 2019 6:01 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தால் பா.ஜனதா, சிவசேனாவின் ஓட்டுகள் அதிகரிக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபைக்கு வரும் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு கட்சிகளின் தேசிய தலைவர்களும் பிரசாரத்திற்காக மராட்டியத்திற்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி மராட்டியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் யவத்ம லில் நேற்று பிரசாரம் செய்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி பிரசாரத்தை கடுமையாக தாக்கி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

2014-ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 42 இடங்களை வென்றது. இந்த முறை தனது கட்சி 24 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என்பதை நன்கு அறிந்த ராகுல் காந்தி பிரசாரம் செய்ய விரும்பவில்லை. எனவே அதற்கு பதிலாக வெளிநாடு சென்றுவிட்டார்.

மராட்டியத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்தம், ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பழைய பிரச்சினைகளை பேசிக்கொண்டு இருக்கிறார்.

இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் எழுப்பியது. ஆனால் அது எடுபடாததால் தான் பா.ஜனதா பெரும் வெற்றியை பெற்றது. காங்கிரஸ் படுதோல்வி கண்டது. தொடர்ந்து ராகுல் காந்தி பிரசாரம் செய்தால் பா.ஜனதா, சிவசேனாவின் ஓட்டுகள் தொடர்ந்து அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story