திட்டக்குடி அருகே தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்


திட்டக்குடி அருகே தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே திருவட்டத்துறை -கொடிக்களம் இடையே 1½ கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்று நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி திருவட்டத்துறை-கொடிக்களம் இடையே தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சென்று சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு சாலை அமைத்தால் விரைவில் அவை சேதமடைந்து விடும். இதனால் அரசு பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நல்ல தரத்துடன் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள், நல்ல தரத்துடன் சாலை அமைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story