உளுந்தூர்பேட்டை அருகே தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதல்; தம்பதி பலி


உளுந்தூர்பேட்டை அருகே தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதல்; தம்பதி பலி
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 5:47 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய கார் தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி பலியாகினர்.

உளுந்தூர்பேட்டை,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரத்தை சேர்ந்தவர் நூர் முகமது மகன் அசன் முகமது (வயது 50). இவரது மனைவி சபிதா கனி(45). இவர்களுடைய மகள் அமிதா பானு(13). அசன் முகமது சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் வெளிநாடு சென்று ஓராண்டுக்கு மேல் ஆனதால் அசன் முகமது தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக நேற்று காலை வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் தன்னை அழைத்து செல்ல வந்த மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வழியாக ஆத்தூருக்கு புறப்பட்டார். ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் காரை ஓட்டினார்.

உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனூர் அருகே சென்றபோது, திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய அசன் முகமது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சபிதா கனி, அமிதா பானு, உறவினர்கள் சர்புதீன் மகள் ஷலா உதயன்(24), ரகமத்துல்லா மனைவி பாத்திமா பீவி(29), இவரது மகள் ஷாகிராபானு(9), டிரைவர் சிவா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் சபிதா கனி, சிவா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சபிதா கனி பரிதாபமாக இறந்தார். சிவாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பலியான அசன் முகமது உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story