வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக மெகா மோசடி சென்னையில் கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல் கைது பரபரப்பு தகவல்கள்


வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக மெகா மோசடி சென்னையில் கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 16 Oct 2019 3:45 AM IST (Updated: 16 Oct 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி மெகா மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

செல்போனில் தொடர்பு கொண்டு இனிய குரலில் பெண்கள் பேசுவார்கள். ‘உங்களுக்கு கடன் உதவி தேவைப்பட்டால்’ குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் ஒரே வாரத்தில் கடன் பெற்றுத்தரப்படும் என்று அந்த பெண்கள் இனிக்க இனிக்க பேசுவார்கள். அந்த பேச்சை உண்மை என்று நம்பி கடன் உதவி தேவைப்படுகிறது என்று சொன்னால், உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பி வைப்பார்கள்.

அந்த விண்ணப்ப மனுக்களை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பியவுடன் நீங்கள் கேட்கும் கடன் தொகைக்கு ஏற்ப உங்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை ‘டெபாசிட்’ செய்ய சொல்வார்கள். அடுத்த கட்டமாக உங்கள் ஆதார் எண்ணை கேட்பார்கள். இதை தொடர்ந்து வங்கி ஏ.டி.எம். கார்டின் ஓ.டி.பி. எனப்படும் ரகசிய குறியீட்டு எண்ணையும் கேட்பார்கள். ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்தவுடன் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணத்தை ஆன்லைன் மூலமாக எடுத்து விடுவார்கள். ஆனால் உங்களுக்கு வங்கி கடனும் கிடைக்காது. கடன் கிடைக்கும் என்ற ஆசையில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்திய பணமும் பறிபோகிவிடும். இது போன்ற ஒரு மெகா மோசடியை பொதுமக்களை ஏமாற்றி சமீபகாலமாக சென்னையில் ஒரு கும்பல் அரங்கேற்றி வந்தது.

இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்த பொது மக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர். ஒரே வாரத்தில் 100 பேர் ரூ.25 லட்சம் வரை இழந்து மோசடி கும்பலிடம் மோசம் போய் விட்டதாக புகார் மனுக்களை கொடுத்தனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாக ஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் கந்தவேல், மீனாகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. வங்கிகளில் கடன் வாங்கித்தருவதாக பொது மக்களிடம் ஆசைக் காட்டி போனில் பேசி பணத்தை சுருட்டி வந்த மோசடி கும்பல் சென்னை சிட்லப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அலுவலகம் வைத்து செயல்படுவது தெரியவந்தது.

அந்த அலுவலகத்தில் போலியான கால் சென்டர் ஒன்று இயங்கி வந்தது. அங்கு 5 பெண்கள் பணி செய்தனர். அவர்கள் தான் பொது மக்களிடம் செல்போனில் இனிமையாக பேசி வங்கி கடன் ஆசைக்காட்டி மோசடிக்கு துணை போனவர்கள் என தெரியவந்தது. மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மோசடி கும்பல் நடத்திய கால் சென்டரிலும், அலுவலகத்திலும் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 1,500 பேரிடம் விண்ணப்ப மனுக்களை வாங்கி, வங்கி கடன் வாங்கி தருவதாக அவர்களது கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கால் சென்டரில் வேலை பார்த்த 5 பெண்கள் உட்பட மோசடி கும்பலை சேர்ந்த 12 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட 12 பேர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1. மணிகண்டன்(வயது 26) - விழுப்புரம் மாவட்டம், பசுமலை தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர். 2. முத்துக்குமார்(27) - சென்னை, தாம்பரம். 3. சிலம்பரசன்(23) - சென்னை, காரப்பாக்கம். 4. சர்மிளா (எ) ரியா(32) - காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர். 5. முகமது இஸ்மாயில்(21) - சென்னை, வெட்டுவாங்கேணி. 6. ஆகாஷ்(21) - சென்னை, பள்ளிக்கரணை. 7. வித்யாசாகர்(20) - சென்னை, திருவான்மியூர். 8. முத்துராஜ்(21) - சென்னை, தாம்பரம். 9. லட்சுமி(27) - சென்னை, ஈஞ்சம்பாக்கம். 10. ஜீவரத்தினம்(27) - சென்னை, கெரம்பாக்கம். 11. மகாலட்சுமி(22) - சென்னை, கண்ணகிநகர். 12. ஐஸ்வரியா(20) - சென்னை, சோழிங்கநல்லூர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் தான் மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளார். 9-வது வகுப்பு வரை படித்துள்ள அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள ஒரு மோசடி கும்பலிடம் வேலை பார்த்துள்ளார். அந்த அனுபவத்தில் மணிகண்டன் தானே அந்த தொழிலை செய்ய தொடங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 5 பெண்களும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்துள்ளனர். மோசடி செய்த பணம் அணைத்தையும் மணிகண்டனே சுருட்டியதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போன்ற மோசடியில் ஈடுபட்டதாக கோபி கிருஷ்ணன் என்பவர் உள்பட 19 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story