திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுக்கிய 14 கிலோ கஞ்சா சிக்கியது


திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுக்கிய 14 கிலோ கஞ்சா சிக்கியது
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 8:05 PM GMT)

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 கிலோ கஞ்சா சிக்கியது.

திருச்சி,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு நேற்று அதிகாலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த ரெயில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. காலை 9.30 மணி அளவில் ரெயில்வே முதுநிலை பொறியாளர் சின்னசாமி அந்த ரெயிலில் ஏறி பராமரிப்பு பணியை கண்காணித்தார். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கருப்புநிற ‘பை’ ஒன்று இருந்தது. இதேபோல் எஸ்-2 பெட்டியிலும் பயணிகள் இருக்கைக்கு அடியில் மெரூன் கலர் ‘பை’ ஒன்று இருந்தது.

இதுகுறித்து அவர், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு சென்று 2 பைகளையும் கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு பைகளை திறந்து பார்த்தனர். அந்த பைகளுக்குள் 7 பாலித்தீன் பைகள் இருந்தன. அவற்றில் 14 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை

ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் திருச்சியில் இருந்து இறங்கி வெளியே சென்றால் போலீசார் சோதனையில் சிக்கி கொள்வோம் என அஞ்சி ரெயில் பெட்டியில் இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்ததும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்? என போதைப்பொருள் தடுப்புபிரிவு போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா சிக்கிய சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story