காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் சிக்கிய உடுமலை ராணுவ அதிகாரி சாவு


காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் சிக்கிய உடுமலை ராணுவ அதிகாரி சாவு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

காமநாயக்கன்பாளையம் அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் உடுமலையை சேர்ந்த ராணுவ அதிகாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உடுமலை,

உடுமலை ஏரிபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). மரக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி ரேணுகாதேவி(45). இவர்களது மகன் சுபாஷ்(24). இந்த நிலையில் ரேணுகாதேவி தனது மகன் சுபாசுடன்(24) பல்லடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.பின்னர் அங்கிருந்து அவர்கள் கடந்த 12-ந்தேதி அதிகாலை காரில் உடுமலைக்கு புறப்பட்டனர். காரை செல்வகுமார்(25) என்பவர் ஓட்டினார். அந்த கார் காமநாயக்கன்பாளையம் அருகே வாவிபாளையம் பி.ஏ.பி.வாய்க்கால் அருகே அதிகாலை 5.30 மணியளவில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் ரேணுகாதேவி வந்த கார் நொறுங்கியது. 2 கார்களில் இருந்தவர்களும் அலறினார்கள். விபத்தை பார்த்து அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கார் நொறுங்கியதால் ரேணுகாதேவி உள்ளிட்ட 3 பேரையும் மீட்க முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசாரும், பல்லடம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அவர்கள் காருக்குள் சிக்கிய ரேணுகாதேவி, சுபாஷ், டிரைவர் செல்வக்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ரேணுகாதேவி பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த அவரது மகன் சுபாஷ், டிரைவர் செல்வகுமார் ஆகிய இருவரும் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சுபாஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்தபோன சுபாஷ் கார்க்கில் ராணுவ படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊரான உடுமலைப்பேட்டை ஏரிப்பாளையத்திற்கு வந்தவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story