ரெயில் முன் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2019 3:30 AM IST (Updated: 16 Oct 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் பணகுடி புஷ்பபுரத்தை சேர்ந்தவர் மிக்கேல். இவருடைய மகன் புஷ்பராஜ் (வயது 15). வடக்கன்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். புஷ்பராஜ் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்ததாகவும், எனவே நன்றாக படிக்கும்படி புஷ்பராஜை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவன் மனவேதனையில் காணப்பட்டான்.

இந்த நிலையில் புஷ்பராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றான். பின்னர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடினர்.

தற்கொலை

இந்தநிலையில் பணகுடிக்கும், வள்ளியூருக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் புஷ்பராஜ் பிணமாக கிடப்பதாக அவர்களுக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடினர். அங்கு புஷ்பராஜின் உடல் உருகுலைந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். புஷ்பராஜ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story