நாகர்கோவில் மாநகராட்சியில் மேலும் 5 பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம் ஆணையர் தகவல்


நாகர்கோவில் மாநகராட்சியில் மேலும் 5 பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம் ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 8:58 PM GMT)

நாகர்கோவில் மாநகராட்சியில் மேலும் 5 பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆணையர் சரவணகுமார் கூறினார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆணையர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இடையூறாக உள்ள பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டதி பெண்கள் பள்ளி அருகே இருந்த பஸ் நிறுத்தம் பள்ளிக்கூடத்துக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டது. இதே போல கலெக்டர் அலுவலகம் முன் உள்ள பஸ் நிறுத்தத்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் மேலும் 5 பஸ் நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக ஆணையர் சரவணகுமார் கூறினார்.

5 பஸ் நிறுத்தங்கள்

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலெக்டர் அலுவலகம் முன் உள்ள பஸ் நிறுத்தத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதை மாற்றும் பணி நடக்கிறது. மேலும் டெரிக் சந்திப்பில் உள்ள 2 பஸ் நிறுத்தங்கள், முதலியார்விளை, பறக்கை ரோடு மற்றும் கலெக்டர் அலுவலக சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தங்கள் என மொத்தம் 5 பஸ் நிறுத்தங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அவற்றை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். நாகர்கோவில் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு 95 சதவீதம் குறைந்துவிட்டது. மீதமுள்ள 5 சதவீத பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் 100 சதவீத பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக நாகர்கோவில் திகழும் என்றார்.

முன்னதாக வெட்டூர்ணிமடம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவரை இடிப்பது தொடர்பாக ஆணையர் சரவணகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story