நாமக்கல்லில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியை தீர்த்துக்கட்டிய கும்பல் பரபரப்பு தகவல்கள்


நாமக்கல்லில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியை தீர்த்துக்கட்டிய கும்பல் பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியை கும்பல் தீர்த்துக்கட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 27). பழ வியாபாரி. இவரது மனைவி அனிதா (23). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிக்கு 7 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. நாமக்கல்-சேந்தமங்கலம் சாலை காமராஜர் நகரில் உள்ள மாமனார் கருப்பசாமி வீட்டில் விமல்ராஜ் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி, அவரது மகள் அனிதா, மருமகன் விமல்ராஜ் ஆகியோர் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் டி.வி. பார்த்து கொண்டு இருந்த விமல்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் விமல்ராஜ், அவரது மனைவி அனிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். கருப்பசாமி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதற்கிடையே வெளியே சென்று இருந்த கருப்பசாமி மனைவி கலாவதி வீட்டிற்கு திரும்பி வந்ததும் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பசாமியை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் படுகொலை செய்யப்பட்ட விமல்ராஜ், அனிதா ஆகியோரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களின் உடல்கள் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் பழி வாங்குவதற்காக கணவன்-மனைவி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொலை செய்யப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண். இவர் கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும் நாமக்கல்லில் வசித்து வரும் நிக்கல்சன் என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். எனவே அருண், அடிக்கடி நிக்கல்சன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது நிக்கல்சன் மனைவியுடன் அருணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இது நிக்கல்சனுக்கு தெரியவரவே அவர் பலமுறை அருணை எச்சரித்துள்ளார். இந்த நிலையில் நிக்கல்சனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். எனவே மனைவி பற்றி தெரிந்துகொள்ள நிக்கல்சன், அருணை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இந்த நிலையில் மனைவி மாயமானதற்கு அருண்தான் காரணம் என எண்ணிய நிக்கல்சன், அவரது குடும்பத்தினரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அருணின் தங்கை அனிதா மற்றும் அவரது கணவர் விமல்ராஜ் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

இருப்பினும் கொலையாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த இரட்டை கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story