மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் புதிதாக 2 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 6¼ லட்சம் குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இவர்களுக்கு மாவட்டம் முழுவதும் முழுநேர மற்றும் பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,035 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கடந்த மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், புதிய கார்டுக்கான விண்ணப்பம் பெறப்படவில்லை. இதையடுத்து ஜூன் மாதம் முதல் மீண்டும் புதிய ஸ்மார்ட் கார்டுக்காக விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இவை வட்டார வழங்கல் அலுவலர்கள் மூலம் முறையாக விசாரணை செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அதை காண்பித்தால் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்படும். அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை விண்ணப்பித்தவர்களுக்கு புதிதாக ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 100 பேருக்கு புதிதாக ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வந்துள்ளன. அந்த கார்டுகள் அனைத்தும் தாலுகா அலுவலகம் வாரியாக பிரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எனவே, செல்போனுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்துள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு சென்று ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று வழங்கல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story