கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளி கைது


கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 9:23 PM GMT)

கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர் செம்பாலா பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமி உள்ளே நுழைந்து அங்கு வைத்திருந்த 8 பவுன் நகையை திருடி சென்றான். இது தொடர்பாக தேவராஜ் கூடலூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் எந்த துப்பும் துலங்க வில்லை.

இந்த நிலையில் கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்தவர் ஜமால் முகமது. இவர் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமைவா. ஓவேலி பேரூராட்சி தருமகிரி அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். கடந்த 5-ந் தேதி அதிகாலை தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் ஜமால் முகமது கேரளா புறப்பட்டு சென்றார். பின்னர் 8-ந் தேதி காலை 6 மணிக்கு ஜமால்முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

அப்போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த மடிக்கணினி, ரூ.5 ஆயிரம் ரொக்கம், புதிய துணிகள், 4 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜமால்முகமது கூடலூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், ராஜாமணி, பிரகா‌‌ஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கூடலூர் செம்பாலா அருகே ஈட்டிமூலா பகுதியை சேர்ந்த ராஜா(வயது 57) என்ற கூலி தொழிலாளி, வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தேவராஜ், ஜமால்முகமது ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்து திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பவுன் நகை மற்றும் மடிக்கணினி, செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Next Story