அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை


அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 11:00 PM GMT (Updated: 15 Oct 2019 9:23 PM GMT)

அ.தி.மு.க. 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு நாளை (வியாழக்கிழமை) மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை,

அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நாளை அ.தி.மு.க. மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பேரூராட்சி, ஒன்றிய, நகர, வார்டு பகுதி, ஊராட்சி கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கட்சியின் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் உள்ளிட்டோர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மேலும் அவர்களின் திரு உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியை ஏற்றி வைத்தும், இனிப்பு வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story