ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு- பரபரப்பு


ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு- பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகு தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு சிமெண்டு சிலாப் மீது பிளாஸ்டிக் பை இருந்தது. அந்த பையை பிரித்து பார்த்தபோது வைக்கோலால் சுற்றப்பட்டு உருண்டை வடிவில் நாட்டு வெடிகுண்டு போன்று இருந்தது. இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதனை பரிசோதித்தனர். அப்போது அது நாட்டு வெடிகுண்டு என தெரியவந்தது. இதையடுத்து அதை மணல் நிரப்பிய ஒரு வாளியில் வைத்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்றனர். வாலாந்தரவை பகுதியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-

வாலாந்தரவையில் தர்மராஜ் மற்றும் பாஸ்கரன் தரப்பினரிடையே அடிக்கடி மோதல் சம்பவங்களும், பழிக்குப்பழி கொலை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இந்த நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாலாந்தரவை பகுதியில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் உள்ளனவா? என்று சோதனையிட்டு வருகின்றனர். பிரச்சினைக்குரிய இரண்டு பேர் தரப்பிலும் சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story