சிவகாசியில் 4 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம்


சிவகாசியில் 4 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம்
x
தினத்தந்தி 15 Oct 2019 10:30 PM GMT (Updated: 15 Oct 2019 9:54 PM GMT)

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று தொடர்ந்து 4 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதில் விஸ்வநத்தம் கிராமத்துக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று காலை 9 மணிக்கு லேசாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 10 மணிக்கு மேல் இடி மின்னலுடன் மதியம் 1 மணி வரை பெய்ததால் மழை நீர் பல இடங்களில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. சாலையில் நடந்து சென்றவர்களும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் பெரிதும் பாதித்தனர். சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நின்றது.

குறிப்பாக வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள சிவகாசி கார் நிறுத்தம் அருகே குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. அதேபோல் அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் உள்ள ஓடை மழை நீரால் நிரம்பி சாலையில் கரைபுரண்டு ஓடியது. சிவகாசி பஸ் நிலையம் பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்தை பாதித்தது.

சிவகாசி நகராட்சியையொட்டி உள்ள விஸ்வநத்தம் பஞ்சாயத்து பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதி இல்லை. மேலும் அந்த பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் தொடர் மழையால் பல இடங்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விஸ்வநத்தம் பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. மேலும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளும் உள்ளது.

இந்த ஆலைகளுக்கு கனரக வாகனங்களில் சென்றவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சென்றனர். ஆனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடையில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த கடையில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேறினர். அதே பகுதியில் உள்ள பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

சிவகாசி பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் நேற்று காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் எந்த பட்டாசு ஆலையிலும் பட்டாசு உற்பத்தி நடக்கவில்லை. பணிக்கு வந்த தொழிலாளர்களும் உடனே வீடு திரும்ப முடியவில்லை. ஆலையை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் இன்னும் 2 நாட்களுக்கு உற்பத்தி பாதிக்கும் என்று பட்டாசு உற்பத்தியாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ஏற்கனவே 60 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடந்துள்ள நிலையில் மீதம் உள்ள நாட்களில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு விலை உயரவும், பட்டாசு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மழையால் சிவகாசி அருகே அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திடீர்காலனியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி உதவிகலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலான மழையால் அய்யனார்கோவில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.

Next Story