மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.61½ லட்சம் மோசடி; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.61½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
மும்பை பைகுல்லா, பாபுராவ் ஜகதாப் மார்க் பகுதியை சேர்ந்தவர் அப்துல் வாகித்(வயது60). இவர், தனது மகளை மருத்துவ மேல்படிப்புக்காக கல்லூரியில் சேர்க்க விரும்பினார். அப்போது நாக்பாடா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த மிலிந்த் ஹிவாரே அவரது செல்வாக்கை பயன்படுத்தி கே.இ.எம். மருத்துவ கல்லூரியில் அப்துல் வாகித்தின் மகளுக்கு மருத்துவ மேல்படிப்புக்கு ‘சீட்’ வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.
இதைநம்பிய அவர் கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு தவணைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரிடம் ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து உள்ளார். ஆனால் சொன்னதுபோல சப்-இன்ஸ்பெக்டர் அவரது மகளுக்கு மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்.
இந்த மோசடி குறித்து அப்துல் வாகித் நாக்பாடா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் தற்போது மும்பை ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் மிலிந்த் ஹிவாரே மற்றும் அவரது கூட்டாளிகள் நியாமத் கான், பிரசாத் காம்ளே, சிவாஜி கோரே ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் நியாமத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story