மராட்டியத்தில் 2022-க்குள் அனைவருக்கும் வீடு; 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் வீர சாவர்கருக்கு பாரத ரத்னாவிருது வழங்க அரசுக்கு கோரிக்கை, அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இதில், பா.ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
சிவசேனா கடந்த சில தினங்களுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், பா.ஜனதா - சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மலிவு விலை உணவகங்கள் மூலம் 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கப்படும், குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதி இடம் பெற்று இருந்தது.
இந்தநிலையில், மும்பையில் நேற்று பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பா.ஜனதாவின் தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தனர்.
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*மராட்டியத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*மாநில பொருளாதாரத்தை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
*2022-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்படும்.
*மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கவும் மற்ற பணிகளை செய்யவும் தனித்தனியாக துறைகள் உருவாக்கப்படும்.
*ரூ.16 ஆயிரம் கோடியில் மரத்வாடாவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
*மாநிலம் முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
* மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகாசபையை சேர்ந்தவருமான வீர சாவர்கருக்கு நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.
இதேபோல சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா புலே, சாவித்ரி பாய் புலே ஆகியோருக்கும் ‘பாரத ரத்னா விருது’ வழங்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பா.ஜனதா தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா நிருபர்களிடம் கூறுகையில், “மராட்டியத்தில் அரசியல் கலாசாரத்தையே முதல்-மந்திரி பட்னாவிஸ் மாற்றி உள்ளார். முன்பு ஊழல் நிறைந்த மாநிலம் என்று அழைக்கப்பட்ட மராட்டியம் இன்று ஊழல் அற்ற மாநிலம் என அழைக்கப்படுகிறது. முன்பு முதல்-மந்திரி இருக்கை இசை நாற்காலி போல் இருந்தது. ஆனால் பட்னாவிஸ் நிலையான அரசாங்கத்தை வழங்கினார்” என்றார்.
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 9 முதல் 10 சதவீதம் மராட்டியத்தில் உள்ளது. ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வேலைவாய்ப்பில் மராட்டியம் 25 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டதாகவும், பொருளாதார மந்தநிலை நிலவுவதாகவும் கூறுகின்றன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின் போது, மராட்டியத்தில் எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்பதை அறிவிக்க முடியுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story