தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை


தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் வழங்கக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர்,

தென்னாற்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர் சங்க தலைவர் பக்கிரி தலைமையில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகராட்சியில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த 21 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வெகுமதி நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 

சம்பளத்தில் பிடிக்கப்பட்ட மாத தவணை மற்றும் கடன் தொகை பிடித்தத்தை கணக்கில் காட்டாமல் 2 ஆண்டுகளாக நிலுவைத்தொகையை கட்ட வேண்டும், அகவிலைப்படி கடந்த 4 மாதமாக நிலுவைத்தொகை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ரூ.10 ஆயிரம் முன்பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியபடி திடீரென கடலூர் நகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், உங்களது கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனை ஏற்ற துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் சங்க பொருளாளர் அரசகுமரன், செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Next Story