மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி


மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 3:10 PM GMT)

மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி அரியலூரில் நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் ரத்னா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் கண்காட்சியுடன் அறிவியல் பெருவிழா, கணித கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்பட்டது.

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானியை உருவாக்கிடும் விதத்தில் இக்கண்காட்சியில் படைப்புகள் இருந்தன. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருட்களின் முக்கியத் தலைப்புகள் ஆரோக்கியமும் சுகாதாரமும், ஆற்றல் வளங்கள் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, நீர் வளங்களை பாதுகாத்தல், மறு சுழற்சி, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் ஆகிய தலைப்புகளில் மாணவ-மாணவிகள் கண்காட்சியினை அமைத்திருந்தனர். கண்காட்சியில் 161 பள்ளிகளிலிருந்து 321 படைப்புகள், 19 அரங்குகளில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 படைப்புகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள்

இதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்), செல்வராசு (உடையார்பாளையம்), மணிமொழி (செந்துறை), பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 114 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு அறிவியல் சம்பந்தப்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்து கண்ணன் செய்திருந்தார்.

பெரம்பலூர்

இதே போல் பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி ஜவஹர்லால் நேரு 47-வது மாவட்ட அளவிலான கணிதம், சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் கண்காட்சி பெரம்பலூர்-துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கண்காட்சியியை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அருளரங்கன் வரவேற்றார். இந்த கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 140 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் 165-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story