குடிபோதையில் வந்ததை கண்டித்ததால் போக்குவரத்து போலீசாருடன் தகராறு செய்து கொலைமிரட்டல்
குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வந்ததை கண்டித்த போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி,
ஆரணி நகர போக்குவரத்து போலீசார் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மோட்டார்சைக்கிளுக்கான ஆவணங்களை சரிபார்க்க கேட்டனர்.
அப்போது 3 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது அதில் ஒருவர் எனது உறவினர் போலீஸ்காரராக உள்ளார். வாகன சோதனை செய்யும் விதிமுறைகள் குறித்து எங்களுக்கும் தெரியும். எங்களிடமே நீங்கள் மிரட்டுகிறீர்களா? என கேட்டு போலீஸ்காரர்களிடம் 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் போலீஸ்காரர்களுக்கு கொலைமிரட்டலும் விடுத்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 3 மாணவர்களையும் பிடித்து நகர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையின்போது 3 பேரும் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பவர்கள் என்பதும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story