நின்றபடி பயணம் செய்த போது, ஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு


நின்றபடி பயணம் செய்த போது, ஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 16 Oct 2019 11:19 PM IST)
t-max-icont-min-icon

நின்றபடி பயணம் செய்த போது ஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமாரபாளையம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பக்கம் உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து அன்னை சத்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோகிலா (வயது 55). இவர் நேற்று காலை பெருந்துறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு செல்வதற்காக குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து இருந்தார்.

அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் கோகிலா ஏறிக்கொண்டார். பின்னர் அந்த பஸ் குமாரபாளையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டை மேடு பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.

அந்த இடத்தில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், பஸ் சர்வீஸ் ரோடு வழியாக இறங்கி சென்றது. அப்போது ஒரு திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பியபோது பஸ்சின் படிக்கட்டு வழியாக கோகிலா கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை, முன்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பஸ்சின் படிக்கட்டு அருகே நின்றபடி கோகிலா பயணம் செய்தபோது, கண்டக்டர் டிக்கெட் கொடுக்க வந்துள்ளார். அப்போது கோகிலா தனது பர்சில் இருந்து பணத்தை எடுத்து டிக்கெட் வாங்க கண்டக்டரிடம் கொடுத்த, அதே சமயத்தில் பஸ் வளைவில் வேகமாக திரும்பி உள்ளது.

அப்போது எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்று கொண்டு இருந்த கோகிலா பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்தது தெரிய வந்தது. கோகிலா பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story