ஊட்டியில், தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்த இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள்
ஊட்டியில் தாவரவியல் பூங்காவை இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி,
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம், புனித ஸ்டீபன் ஆலயம் கலைக்கல்லூரி, தாவரவியல் பூங்கா, தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பல்வேறு கட்டிடங்களை இங்கிலாந்து நாட்டில் உள்ளதைப்போல் கட்டி வடிவமைத்தனர். தற்போதைய காலத்திலும் அந்தக் கட்டிடங்கள் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து வசதி இல்லாத அந்த நேரத்தில் வெளிநாடுகளிலிருந்து கப்பலில் மரக்கன்றுகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டன.
அந்த மரங்கள் இயற்கை அழகுடன் பசுமையாக காட்சி அளிக்கிறது. பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படுகிறது. தாவரவியல் பாடப்பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்கள் பலர் இங்கு வந்து பழமையான மரங்கள்,, மலர்ச்செடிகள், அலங்காரச் செடிகள்போன்றவற்றை பார்வையிட்டு செல்கிறார்கள்.
மலைப் பிரதேசமான ஊட்டியில் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இனி வரும்காலங்களில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் நிலவும் காலநிலை ஊட்டியிலும் நிலவுவதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். நேற்று இங்கிலாந்து நாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் 20 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.
அங்கு பழமைவாய்ந்த கட்டிடத்தை பார்த்து ரசித்ததோடு அதுகுறித்த விவரங்களை கேட்டறிந்தனர். காட்சிக்காக வைக்கப்பட்ட பீரங்கிகள், பலவண்ண மலர்ச்செடிகள், கண்ணாடி மாளிகைகள், அழகான புல்வெளிகள் போன்றவற்றை கண்டு ரசித்தனர்.
மேலும் அவர்கள் அதனை கேமராவில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புனித ஸ்டீபன் ஆலயத்துக்கு சென்றனர். ஆலய வளாகத்தில் தங்களது முன்னோர்கள் கல்லறைகளை பார்வையிட்டனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டியில் சுற்றுலா தளங்கள் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசித்தது பிரமிப்பாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். தற்போது வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேனிலவுக்காக ஊட்டிக்கு வர தொடங்கி உள்ளனர்.
இதேபோல் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து பூங்காவை சுற்றிப்பார்த்தனர்.
Related Tags :
Next Story