பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:45 AM IST (Updated: 17 Oct 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வீட்டன் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் மாலையில் இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு பின்புறம் உள்ள தென்மரத்தின் ஓரமாக சென்றார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர்(வயது27) என்பவர், சிறுமியிடம் பேச்சு கொடுத்து, உனக்கு மிட்டாய் வாங்கி தருகிறேன் என கூறி தனது வீட்டுக்கு துணியால் வாயை பொத்தி, தூக்கி சென்றார்.

பின்னர் சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த அதிர்ச்சியில் சிறுமி மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்து பார்த்த சிறுமி கதறி அழுதார். அப்போது இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்வதுடன், உன் அக்காவையும் இதைப்போல செய்துவிடுவேன் என சங்கர் மிரட்டினார். இதையடுத்து அந்த சிறுமியை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டதால் அழுது கொண்டே வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து தஞ்சை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி எழிலரசி விசாரணை செய்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சங்கருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார்.

Next Story