முத்துப்பேட்டையில் வலையில் சிக்கிய பாம்புகள் வாலிபர் துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்


முத்துப்பேட்டையில் வலையில் சிக்கிய பாம்புகள் வாலிபர் துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 6:53 PM GMT)

முத்துப்பேட்டையில் வலையில் சிக்கிய பாம்புகளை வாலிபர் ஒருவர் துணிச்சலுடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளிதோப்பு, ரஹ்மத் நகர், கருமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் அருகருகே உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. புதியதாக அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதிகள் நடுவே கருவை காடுகளும் உள்ளன. இதனை ஒட்டி ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பாதையும் கடந்து செல்கிறது. இதில் கடந்த ஆண்டு ரெயில் நிலையம் சீரமைப்பு மற்றும் அகல ரெயில்பாதை பணிகள் நடந்தபோது இந்த பகுதி காடுகள் சுத்தம் செய்யப்பட்டன.

அப்போது அங்கு தஞ்சம் அடைந்து இருந்த ஏராளமான பாம்புகள், அங்கிருந்து தப்பி குடியிருப்புகள் நடுவே உள்ள கருவை காடுகளுக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் பாம்புகள் அதிகமாக தென்பட்டன. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். பலர் வீடுகளுக்குள் பாம்புகள் புகாமல் இருக்க வீட்டை சுற்றிலும் உள்ள வேலிகளில் வலை கட்டி வைத்துள்ளனர்.

2 பாம்புகள் வலையில் சிக்கின

இந்தநிலையில் மருதங்காவெளி தோப்பு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வீட்டை சுற்றி வேலியில் கட்டப்பட்டு இருந்த வலையில் நேற்று 6 அடி நீளம் கொண்ட 2 சாரை பாம்புகள் சிக்கின. 2 பாம்புகளும் வலையில் இருந்து தப்பிக்க முயன்றது. ஆனாலும் அதன் முயற்சி பலிக்கவில்லை. இந்த செய்தி பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் கூடினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வீட்டின் உரிமையாளர் பாம்பை வலை விரித்து பிடித்து இருந்தாலும் அதனை கொல்ல அவருக்கும், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் மனமில்லை. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

துணிச்சலுடன் பிடித்த வாலிபர்

இந்தநிலையில் அங்கு வந்த ராஜே‌‌ஷ் என்ற வாலிபர் துணிச்சலுடன் களமிறங்கி வலையில் சிக்கிய 2 பாம்புகளையும் எந்தவித காயமும் ஏற்படாமல், சாதுரியமாக உயிருடன் பிடித்து சாக்கு பைக்குள் போட்டார். இதனை வேடிக்கை பார்த்த அந்த பகுதி மக்கள் துணிச்சலுடன் பாம்பை பிடித்த ராஜேசை பாராட்டினர்.

பின்னர் பிடிபட்ட பாம்புகள் அங்கு வந்த வன காவலர் ராமஜெயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பை பிடித்து ஒப்படைத்த அந்த பகுதி மக்களை முத்துப்பேட்டை வனசரக அலுவலர் தாஹீர்அலி பராட்டினார். பின்னர் அந்த பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

Next Story