அரசியல் நாடகத்தை அரங்கேற்றி, வாக்காளர்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள் - விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அரசியல் நாடகத்தை அரங்கேற்றி, வாக்காளர்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள் - விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2019 11:15 PM GMT (Updated: 16 Oct 2019 7:06 PM GMT)

அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வாக்காளர்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள் என்று விக்கிரவாண்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அதனால் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். எனவே திட்டமிட்டு கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை பற்றி விமர்சித்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். ஆகையால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் முத்தமிழ் செல்வனை அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று கொக்கரிக்கும் தி.மு.க.வுக்கு சரியான சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தனக்கு என்ன, என்ன தோன்றியதோ அதையெல்லாம் அறிவித்து சென்று விட்டார். நிறைவேற்ற முடியாத, கவர்ச்சிகரமான திட்டங்களை திரும்ப திரும்ப சொல்லி, பொய் வாக்குறுதிகளை வாரி இறைத்து அதன் மூலமாக மக்களை நம்ப வைத்து விட்டார்.

அதில் ஒன்றாக, மாதம் 6 ஆயிரம் தருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆட்சி செய்வது நாங்கள், எவ்வளவு நிதி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். அப்படி இருந்தால் நாங்களே அள்ளி கொடுத்திருப்போம். ஏனென்றால் இது எங்கள் மக்கள். ஆகவே திட்டமிட்டு, தில்லுமுல்லு செய்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் போட்ட இந்த நாடகத்தில் ஏமார்ந்தது ஏழை மக்கள் தான். இதனால் அவருக்கு என்ன ந‌‌ஷ்டம். ஒரு தலைவர் நிச்சயம் செய்வார் என்று மக்கள் அவரை நம்பினார்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் மு.க.ஸ்டாலின். அவருக்கு தகுந்த பதிலடி கொடுங்கள்.

அ.தி.மு.க.வில் எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை என்று அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். இவ்வாறு வாக்காளர் பெருமக்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள்.

விக்கிரவாண்டியில் 3½ ஆண்டுகாலம் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. தான் இருந்து மறைந்து போனார். ஆனால் நீங்கள் இங்கு வந்து திண்ணை பிரசாரம் என்கிற பெயரில் மக்களிடம் மனுக்களை வாங்குகிறீர்கள். இதன் மூலம் இத்தனை ஆண்டு காலம் உங்கள் எம்.எல்.ஏ. சரியாக வேலை செய்யவில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

உண்மையில் சேவை செய்ய வேண்டும் என்றால் அப்போதே மனு வாங்கி அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்த்து இருக்கலாமே. ஏன் அப்போது செய்யவில்லை. இப்போது உடனடியாக மக்களின் பசிக்கு உணவு தேவை, அவர்களது பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் இவர் மனுவை வாங்கி கொண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் செய்வேன் என்று கூறி ஏமாற்றுகிறார்.

கிராமங்கள் செழிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். பெய்யும் மழைநீர் முழுவதும் பூமிக்குள் சென்று விவசாயம் செழிக்க வழி செய்து வருகிறோம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை.

உணவு உற்பத்தியை பெருக்கி தருபவர் விவசாயி மட்டும் தான். இரவு, பகலாக உழைக்கும் விவசாயிகள் வாழ்வில் நிம்மதி, வளம் பெற வேண்டும் என்பது தான் எங்களது திட்டமாகும். மேலும் விவசாயிகளுக்காக உழவன் என்கிற செயலியையும் அறிமுகம் செய்துள்ளோம். பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக இழப்பீடு பெற்று தந்த அரசு அ.தி.மு.க. தான்.

இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உங்களை போன்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுயஉதவிகுழுவுக்கு அவரது ஆட்சியில் தான் திட்டங்களை கொண்டு வந்தோம் என்று செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க அரசு, வங்கி மூலம் அதிகளவில் கடன் உதவி வழங்கியது.

122 எம்.எல்.ஏ. தான் இருக்கிறார்கள், இதில் கொஞ்சம் பேர் சென்றால் ஆட்சி கலைந்து போய்விடும் என்று தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பாட்டு பாடி வருகிறார். எங்களது ஒரு எம்.எல்.ஏ.வை கூட உங்களால் விலை கொடுத்து வாங்க முடியாது.

உங்களால் ஒரு தொண்டனை கூட தொட்டு பார்க்க முடியாது, உழைக்கிற வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்றும் உறுதியோடு இருப்பார்கள். ஆகையால் எங்களை குறைத்து எடைபோடாதீர்கள். மு.க.ஸ்டாலின் அவர்களே உங்களது கனவு கானல் நீராக தான் போகும்.

என்னை பார்த்து விபத்தில் முதல்-அமைச்சர் ஆனவர், ஜெயலலிதா பெயரை சொல்லி தான் ஓட்டு கேட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நான் கேட்கிறேன், பொதுத்தேர்தலில் உங்கள் பெயரை சொல்லியா ஓட்டு கேட்டார்கள். கருணாநிதி பெயரை சொல்லிதான் ஓட்டு கேட்டார்கள். உண்மையில் உங்களது அப்பாவின் செல்வாக்கில் தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள். அதனால் தான் நீங்கள் எதிர்க்கட்சி தலைவர் ஆனீர்கள்.

அதேபோல் கருணாநிதி மறைவுக்கு பின்னர் தானே உங்களால் கட்சி தலைவர் ஆக முடிந்தது. ஆதலால் விபத்தில் தான் நீங்கள் வந்தீர்கள். ஆனால் ஜெயலலிதா தான் இருக்கும் காலத்திலேயே சாதாரண தொண்டன் கூட முதல்-அமைச்சர் ஆக முடியும் என்கிற நிலையை உருவாக்கி பார்த்தார். உங்களது எண்ணம் சுத்தம் இல்லை, அதனால் தான் உங்களால் முதல்-அமைச்சர் ஆக முடியவில்லை. எந்த காலத்துக்கும் மக்களை ஏமாற்றி வந்தால் எப்படி உங்களை ஆதரிப்பார்கள்.

தி.மு.க.காரர்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். மக்கள் நலனை பற்றி மு.க.ஸ்டாலினுக்கு எண்ணம் இல்லை. அவருக்கு எங்களது ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்பது தான் எண்ணம். இவ்வாறு கெட்ட எண்ணத்தோடு இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஜீரோவாக தான் போவார்.

எங்களை பா.ஜனதாவுக்கு பினாமி என்கிறார். நாங்கள் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்ப்போம் என்பது தான் எங்களது கொள்கை. ஆனால் நீங்கள் ஆட்சியில் இருந்த போது காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையில் வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் பதவி, அதிகாரம் தான் முக்கியம் என்று இருந்துவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story