கிருஷ்ணகிரியில் அதிகாரிகள் திடீர் சோதனை: 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில்தாமஸ் தலைமையில் நகராட்சி ஆய்வாளர்கள் செந்தில்குமார், சந்திரகுமார், குமார், மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன், ராஜா ஆகியோர் கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் சோதனை நடத்தினர்.
இதையொட்டி கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதே போல சேலம் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அதிகாரிகள் அந்த வணிக வளாகத்தில் ஆய்வு செய்ய சென்ற போது கடையின் உரிமையாளர் குடோனை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இதில் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள் அக்கடைக்கு சீல் வைத்தனர்.
இந்த ஆய்வு குறித்து நகராட்சி ஆணையர் கூறும்போது, குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால் கடை பூட்டப்பட்டு இருந்ததால் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. கடைக்கு சீல் வைத்துள்ளோம். கடையின் உரிமையாளர், நகராட்சியை தொடர்பு கொண்டு எங்கள் முன்னிலையில் தான் கடையை திறக்க வேண்டும் என்றார். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story