கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை


கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 17 Oct 2019 5:30 AM IST (Updated: 17 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி ஆட்டுக்குட்டி பிறந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 70). தொழிலாளி. இவருடைய மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஈஸ்வரன் தனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு சினையாக இருந்தது.

ஈஸ்வரன் நேற்று காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது சினையாக இருந்த ஆடு காலை 11 மணியளவில் 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியின் இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி இருந்தது. ஆனாலும் அந்த ஆட்டுக்குட்டியின் இதயம் நன்றாக துடித்துக்கொண்டு இருந்தது.

உடனே அவர் அந்த ஆட்டுக்குட்டியை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் பார்த்து சென்றனர்.

இதையடுத்து ஈஸ்வரன், கணேசபுரம் அந்தோணிநகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். உடனே கால்நடை டாக்டர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்தனர்.அவர்கள், இதயம் மற்றும் இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டியை பாா்த்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து இதயம் மற்றும் இரைப்பையை அந்த ஆட்டுக்குட்டியின் உடலுக்குள் வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து அந்த ஆட்டுக்குட்டிக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை மூலம் இதயம், இரைப்பை ஆகியவற்றை உடலுக்குள் வைத்து சாதனை படைத்தனர். தற்போது அந்த ஆட்டுக்குட்டி நலமாக உள்ளது.

இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

இந்த ஆட்டுக்குட்டி கருவில் இருக்கும்போதே இதயம் மற்றும் இரைப்பை ஆகியவை வெளியே இருந்து உள்ளன. இதனால் பிறக்கும் போதும் அந்த உறுப்புகள் உடலுக்கு வெளியே இருந்துள்ளன. எனவே அறுவை சிகிச்சை செய்து ஆட்டுக்குட்டியின் உடலுக்குள் இதயம், இரைப்பை ஆகியவற்றை சரியாக பொருத்தினோம். தற்போது அது நன்றாக உள்ளது.

அந்த ஆட்டுக்குட்டியின் குறைப்பிரசவத்தில் பிறக்கவில்லை. இதனால் மற்ற உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகின்றன. இது போன்று ஆட்டுக்குட்டி பிறப்பது என்பது மிகவும் அரிதானது தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story