அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு: நூற்றாண்டு விழாவிற்கு தயாராகும் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்


அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு: நூற்றாண்டு விழாவிற்கு தயாராகும் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நூற்றாண்டு விழாவிற்கு தஞ்சை சரசுவதிமகால் நூலகம் தயாராகி வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை அரண்மனை வளாகத்தில் சரசுவதிமகால் நூலகம் உள்ளது. உலக புகழ் பெற்ற இந்த நூலகம் மிகப்பழமையானது. சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு, அவர்கள் பணியால் வளர்ச்சியடைந்து பின்னர் நாயக்கர் மன்னர்களால் வளர்க்கப்பட்டு, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று இன்றைக்கு பன்மொழி சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாக திகழ்கிறது.

இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம் முதலிய பல மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்து பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. இங்கு பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் என 70 ஆயிரம் நூல்கள் உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன.

வால்மீகி ராமாயண ஏட்டுச்சுவடி

உலக புகழ் பெற்ற நூல்கள், பல்வேறு ஏட்டுச்சுவடிகள் மட்டுமின்றி பழங்காலத்தில் கைத்தறி துணியால் செய்யப்பட்ட வண்ண அலங்காரங்கள், ஓவியங்கள், அரிய மருத்துவம், ஜோதிட சுவடிகள், அரிய மூலிகைகளின் வண்ணப்படங்கள், 24 ஆயிரம் பாடல்கள் அடங்கிய வால்மீகி ராமாயண ஏட்டுச்சுவடி ஆகியவையும் உள்ளன.

நூலகத்திற்கு ஆய்வாளர்கள் வருவதுபோன்றே உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் வந்து இங்குள்ள புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் மூலம் தங்களுக்கு தேவையான குறிப்புகளை எடுத்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி நூலகத்தின் சார்பில் இதுவரை இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஜோதிடம், கலை, சிற்பம் என பன்முக சிறப்பு கொண்ட 594 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் நிறைவு

இந்த நூல்கள் அங்கே விற்பனை செய்யப்படுவதுடன், பல்வேறு இடங்களுக்கு நூல்களை கொண்டு செல்லும் வகையில் நடமாடும் நூலகமும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள புத்தகங்கள், நூல்களை கணினிமயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நூலகத்திற்கு வருகை தந்து அங்குள்ள நூலகத்தை மட்டுமின்றி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பழங்கால பொருட்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது தஞ்சை மராட்டிய மன்னர்களின் சந்ததியினரிடம் இருந்த இந்த நூலகம் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 1918-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி சரசுவதிமகால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு பொதுநூலகமாக அறிவிக்கப்பட்டது. உலக புகழ் பெற்ற சரசுவதிமகால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

21-ந் தேதி நூற்றாண்டு விழா

இந்தநிலையில் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக விழா வருகிற 21-ந் தேதி கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விழாவை சிறப்பாக கொண்டாட பல்வேறு அரசு துறையினருடன் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆலோசனை நடத்தி வருகிறார். விழாவையொட்டி அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம், ஆயுதகோபுரம், சரசுவதிமகால் நூலகத்தை மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story