மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலி பறிப்பு 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Oct 2019 3:45 AM IST (Updated: 17 Oct 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அரசு. இவருடைய மகன் கெல்வின்(வயது 27). இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கெல்வின் மோட்டார் சைக்கிளில் பள்ளியக்ரஹாரத்தில் இருந்து பிள்ளையார்ப்பட்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். வண்ணாரப்பேட்டை அருகே அவர் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென கெல்வினின் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

சங்கிலி பறிப்பு

கெல்வின் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு புதர்களில் மறைந்திருந்த 3 பேர் திடீரென பாய்ந்து வந்து கெல்வினை சூழ்ந்து கொண்டு அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி கெல்வின் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கெல்வின் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற 4 பேரையும் தேடி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை 4 பேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story