கோவை மாவட்டத்தில், சட்டவிரோதமாக செயல்பட்ட 86 டாஸ்மாக் பார்களுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் அதிரடி
கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 86 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுடன் அனுமதி பெற்ற பார்கள் இயங்குகின்றன. இந்த பார்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுகின்றன. இவற்றின் காலக்கெடு கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி பார்களுக்கு ஏலம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு நிர்வாக காரணங்களினால் நேற்று முன்தினத்துக்கு ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பார்கள் செயல்படுவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் திருச்சி அதிகாரிகளை கொண்டு சோதனை நடத்தப்பட்டன.
இதில் கோவை வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 159 டாஸ்மாக் கடைகளில் 19 பார்கள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து 19 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. இதேபோல கோவை தெற்கு பகுதியில் செயல்பட்டு வரும் 127 டாஸ்மாக் கடைகளில் 67 பார்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவற்றிற்கும் ‘சீல்’ வைக்கப்பட்டன. இதன் மூலம் கோவை தெற்கு பகுதியில் 19 பார்களும், கோவை வடக்கு பகுதியில் 67 பார்களும் ஆக மொத்தம் 86 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் கடந்த சில நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு சோதனை நடத்தப்பட்டது. விதிமுறைகளின் படி கடந்த 15-ந் தேதி டாஸ்மாக் பார்களுக்கு ஏலம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த புகார்களை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் 86 பார்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக மதுவிலக்கு போலீசாரால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு சற்று தூரத்தில் அனுமதியின்றி பார்கள் நடத்தியதும் இந்த சோதனையின் போது தெரியவந் துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story