சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் உலக சாம்பியனில் தங்கம் வென்ற வீரர் பேட்டி


சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் உலக சாம்பியனில் தங்கம் வென்ற வீரர் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 8:10 PM GMT)

சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று உலக சாம்பியன் சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீரர் கூறினார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். விவசாயி. இவரது மகன் வீரமணிகண்டன். இவர் சிலம்ப போட்டிகளில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த ஆசிய நாடுகளுக்கு இடையேயான 4-வது சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதன்மூலம் மலேசியாவில் நடந்த முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் நடந்த சிலம்ப போட்டியில் இந்தியா சார்பில், 80 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள சென்றனர்.

இதில் வீரமணிகண்டன் தனது பயிற்சியாளர் வேலூர் சத்தியமூர்த்தியுடன் கலந்து கொண்டார். பல்வேறு பிரிவுகளில் பல போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சீனியர் பிரிவில் வீரமணிகண்டன் ஒற்றை வாள் வீச்சில் தங்கமும், ஓழு ஆயுத வீச்சு போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் சிலம்பம்

இந்நிலையில், நேற்று சொந்த ஊருக்கு வந்த வீரமணிகண்டனை அவரது பெற்றோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உறவினர்கள், கிராமத்தினர் வந்து பாராட்டி சென்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்ற பிறகே சிலம்பம் கற்றுக் கொண்டேன். எனது கல்லூரி நிர்வாகி, எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதன்மூலம் விரைவாக சிலம்பம் உள்ளிட்ட அதில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் தேர்ச்சியடைந்து மாவட்ட, மாநில அளவில் பதக்கங்களை வாங்கினேன். தொடர்ந்து பயிற்சியாளர் சத்தியமூர்த்தியின் பயிற்சியில் தேசிய அளவிலும் சாதிக்க முடிந்தது. இப்போது உலக சாம்பியன் போட்டியிலும் பதக்கம் பெற்றுள்ளது பெருமையாக உள்ளது.

கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. ஒவ்வொரு வரும் கற்றுக்கொள்ள வேண்டிய தற்காப்பு கலை சிலம்பம். சிலம்பத்தை ஒலிம்பிக் போட்டிகளில் இன்னும் இணைக்கப்படாமல் உள்ளதால், அரசு உதவிகள் இன்றி சொந்த செலவிலேயே வெளிநாடுகளுக்கும், இந்தியா சார்பில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெயர் வாங்கி வருகிறோம். நான் மலேசியா செல்ல என் பெற்றோர் கடன் வாங்கிதான் அனுப்பி வைத்தனர். அதனால் ஒலிம்பிக்கில் சிலம்பத்தையும் சேர்த்து போட்டிகளுக்கு செல்லும் சிலம்ப வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதுடன் பதக்கங்களை வாங்கி வருவோருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story