பட்டதாரி பெண் சாவில் திடீர் திருப்பம், அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலம் - கணவர், மாமனார் கைது
கம்மாபுரம் அருகே பட்டதாரி பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவர், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊ.மங்கலம் அருகே உள்ள காட்டுக்கூனங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் மரியசத்யராஜ்(வயது 32). இவர் வடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும் அதேஊரை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான மோனிகாசெலஸ்(27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரிஷோனா(2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 20.06.2019 அன்று மோனிகாசெலஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரியசத்யராஜ் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். உறவினர்களின் இறுதி மரியாதைக்கு பிறகு மோனிகாசெலசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மோனிகாசெலசின் தாயார் மாரியம்மாள் அப்போதைய விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த்திடம் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் அடக்கம் செய்யப்பட்ட மோனிகாசெலசின் உடல் கடந்த 22.06.2019 அன்று தோண்டி எடுத்து சப்-கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் இரவு ஊ.மங்கலம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் மோனிகாசெலசின் உடல் உறுப்புகளில் காயங்கள் இருந்ததும், அவரை அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கணவன்-மனைவிக்கிடையே நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த மரியசத்யராஜ் மோனிகாசெலசை கடுமையாக தாக்கியதில் அவர் இறந்துவிட்டார். இதனால் பயந்து போன அவர் இந்த சம்பவத்தை மறைப்பதற்காக தனது தாய், தந்தையருடன் சேர்ந்து மோனிகா செலசை தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி உள்ளது தெரியவந்தது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இவர்கள் 3 பேரையும் காட்டி கொடுத்துவிட்டது.
இதையடுத்து மரியசத்யராஜ், அலெக்சாண்டர் ஆகிய இருவரையும் ஊ.மங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மரியசத்யராஜின் தாயார் மேரிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story