ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில், கண்வலிக்கிழங்கு பயிரில் மகரந்தச் சேர்க்கை பணி தீவிரம்
ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களில் கண்வலிக்கிழங்கு பயிர்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி, கோடாங்கிப்பட்டி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தேவத்தூர், கப்பலபட்டி, கொத்தயம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கண்வலிக்கிழங்கு பயிரானது செம்மண் சார்ந்த விளைநிலங்களில் நன்கு வளர்ந்து விளைச்சல் கொடுக்கக்கூடியது.
அளவான பனி, தண்ணீர், வெப்பம், மழை போன்றவை இருந்தால் மட்டுமே முழுமையாக விளைச்சலை பெற முடியும். அந்த வகையில் சத்திரப்பட்டி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்ற சூழல் நிலவுவதால் விவசாயிகள் அதிக அளவில் கண்வலிக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது கண்வலிக்கிழங்கு பயிரில் மகரந்தச் சேர்க்கை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கண்வலிக்கிழங்கு நடவு செய்த 6 மாதங்களில் விளைச்சல் கொடுக்கும். நடவு, பந்தல் அமைத்தல், உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்றவற்றுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை செலவாகும். தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மகரந்தச்சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கண்வலிக்கிழங்கு சாகுபடியில் போதிய வருமானம் கிடைத்தாலும் தரகர்கள் தலையீடால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். மேலும் விலையும் நிரந்தரமாக இல்லை.அதாவது கடந்த ஆண்டு கிலோ கண்வலிக்கிழங்கு விதை ரூ.3 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.2 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே அரசே கண்வலிக்கிழங்கு விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கும் பயிர் காப்பீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story