போலீஸ் காவல் உத்தரவு பெங்களூருக்கு அனுப்பி வைப்பு: ‘கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரிப்போம்’ போலீஸ் கமி‌‌ஷனர் பேட்டி


போலீஸ் காவல் உத்தரவு பெங்களூருக்கு அனுப்பி வைப்பு: ‘கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரிப்போம்’ போலீஸ் கமி‌‌ஷனர் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:15 PM GMT (Updated: 16 Oct 2019 8:32 PM GMT)

போலீஸ் காவல் உத்தரவு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ‘கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரிப்போம்’ என்றும் போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.

மலைக்கோட்டை,

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையர்கள் ஒரே நாளில் துளையிட்டு கொள்ளையில் ஈடுபடவில்லை. 4 முதல் 5 நாட்கள் துளைபோட்டு உள்ளனர். கடை அருகிலேயே காம்பவுண்டு சுவர் இருந்ததால் கொள்ளையர்கள் சுவரில் ஓட்டைபோட்டு சென்றது யாருக்கும் தெரியாமல் போனது. இதில் நேரடியாக 3 பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வேறு சில குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவாக கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நெ.1 டோல்கேட்டில் நடந்த பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கொள்ளையிலும் மற்றும் வேறு சில கொள்ளைகளிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருகிறோம். கோர்ட்டு உத்தரவுப்படி பெங்களூரு போலீசார் முறையாக 6 நாட்கள் போலீஸ் காவல் எடுத்துதான் திருச்சிக்கு முருகனை அழைத்து வந்துள்ளனர்.

விரைவில் விசாரிப்போம்

பெங்களூருவில் கொள்ளையன் முருகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. பெங்களூரு போலீசாருக்கு, திருச்சி தனிப்படை போலீசாரும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அவர்கள் சட்டப்படியே திருச்சியில் முருகன் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு சென்றனர்.

திருச்சி மாநகர போலீஸ் சார்பில், முருகனை போலீஸ் காவலில் எடுக்க திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்று விட்டோம். அந்த அனுமதி கடித நகலை, கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு அனுப்பி வைத்து விட்டோம். கொள்ளையர்களிடம் இருந்து இன்னும் 100 சதவீத நகைகள் கைப்பற்றப்படவில்லை. கொள்ளையன் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விரைவில் விசாரிப்போம். அப்போது எஞ்சிய நகைகள் எங்கே? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே பெங்களூரு போலீசார், கொள்ளையன் முருகனின் போலீஸ் காவல் நேற்று முடிந்த நிலையில் கோர்ட்டில் அனுமதிபெற்று மேலும் 4 நாட்கள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story