திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் அனுமதி


திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் அனுமதி
x
தினத்தந்தி 16 Oct 2019 11:00 PM GMT (Updated: 16 Oct 2019 8:36 PM GMT)

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு அறிகுறியுடன் வந்த மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். திருச்சி மட்டுமின்றி சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் காய்ச்சலுக்காக வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையிலும் டெங்கு பாதிப்பினால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 2 பேருக்கு அறிகுறி

இது தவிர காய்ச்சலுக்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 25 முதல் 30 பேர் வரை காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேலும் 2 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story