புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது


புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது
x
தினத்தந்தி 17 Oct 2019 12:00 AM GMT (Updated: 16 Oct 2019 9:09 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே புகைப்பட கலைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 38). புகைப்பட கலைஞர். இவருக்கு திருமணமாகி தேவி (30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். முருகன் தனது மனைவியின் சொந்த ஊரான சுண்ணாம்புகுளத்தை அடுத்த செங்கல் சூளைமேடு கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

கடந்த 12-ந் தேதி இரவு தலையில் வெட்டுகாயங்களுடன் முருகன் தனது வீட்டில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து முருகனின் அண்ணன் பொன்னுசாமி (41) ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், முருகனின் மனைவி தேவியின் நடவடிக்கைகள் ஏற்கனவே சரியில்லை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செங்கல் சூளைமேடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் வினோத் (24) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குழந்தைகளுடன் தேவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் அவரை அழைத்து வந்து கிராமமக்கள் முன்னிலையில் சமரசம் பேசி முருகனுடன் சேர்த்து வைத்தோம்.

இருப்பினும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்னை சந்தித்த தம்பி முருகன், தனது மனைவி தேவிக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளதாக சந்தேகப்படுவதாக கூறினார்.

இந்த நிலையில், வீட்டில் வெட்டுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை அறிந்தபோது அந்த கொலையில் தேவிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த படுகொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது அண்ணன் பொன்னுசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார், முருகனின் மனைவி தேவியையும், சந்தேகத்திற்கு இடமான மேலும் 2 நபர்களிடமும் விசாரனை மேற்கொண்டனர்.

முருகனின் தலையில் இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதம் கொண்டு தாக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

விசாரணையில் தேவி முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தார். மேலும் தனக்கு எதுவும் தெரியாது. கணவரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்த நபர்களை கண்டுபிடியுங்கள்.

அதை விட்டு விட்டு சோகத்தில் இருக்கும் என்னிடம் தேவையில்லாத விசாரணை மேற்கொள்வது நியாயமற்றது என்று பெண் போலீசாரிடம் தேவி தெரிவித்து வந்தார்.

அதே சமயத்தில் முருகன் கொலை செய்யப்பட்ட மறுதினம் போலீசார் விசாரணையில் தனது பெயர் இருப்பதையும், தனது உறவினர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதையும் அறிந்த லாரி டிரைவர் வினோத், விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தேவியின் கள்ளக்காதலன் வினோத் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், கொலை வழக்கில் புதிய திருப்பதை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் கொலை சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் தனது செல்போனில் இருந்து கடைசியாக யார் யாருக்கு அழைப்பு சென்றது என்பதை அறிய முடியாத வகையில் அனைத்து அழைப்புகளையும் தேவி அழித்து இருந்ததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சம்பவத்தின்போது தேவியின் செல்போனில் இருந்து யார் யாருக்கு அழைப்பு சென்றது? என்கிற விவரபட்டியலை போலீசார் பெற்றனர்.

அந்த பட்டியலில், தேவியின் கள்ளக்காதலன் வினோத்தின் செல்போன் எண்ணும் இருந்தது. அதன் மூலம் சம்பவத்தன்று இரவு தேவியின் வீட்டிற்கு அவரது கள்ளக்காதலன் வினோத் வந்தது உறுதியானது.

இதனையடுத்து தேவியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கள்ளக்கதாலனை வீட்டிற்கு வரவழைத்தும், தனது கணவர் முருகனை கொலை செய்திட அவர் திட்டமிட்டதும், கொலையில் வினோத் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தேவியிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று தேவியை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கொலையாளியாக கருதப்படும் லாரி டிரைவர் வினோத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story