திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு; சுகாதாரத்துறை செயலாளர் தகவல்


திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு; சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2019 5:00 AM IST (Updated: 17 Oct 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், இதனை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட மருத்துவ குழுவினருக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

பின்னர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கபிலர் நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று கொசுப்புழு உற்பத்தி மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு மருத்துவ முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். அப்போது டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் பிரிவு, காய்ச்சல் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சலுக்கு பிந்தைய கவனிப்பு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருவள்ளூர் உள்பட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 3,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். வீடுகள், அரசு கட்டிடங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பொதுஇடங்களில் ஏடிஸ் கொசு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காதவாறு இருக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. டெங்கு குறித்த விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு ஆஸ்பத்திரிகளை அணுகவேண்டும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து உட்கொள்ள கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story