மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 17 Oct 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்காக அதிகபட்சமாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் ே்தவைக்கேற்ப அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த சில நாட்களாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை இந்த அளவு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதே நேரத்தில் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 113.06 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 594 கனஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story