இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் “தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” திருமாவளவன் பிரசாரம்
“இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” என்று களக்காட்டில் திருமாவளவன் எம்.பி. பிரசாரம் செய்தார்.
களக்காடு,
“இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” என்று களக்காட்டில் திருமாவளவன் எம்.பி. பிரசாரம் செய்தார்.
திருமாவளவன் பிரசாரம்
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து களக்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிதான் நடந்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி நிர்வாகத்தை இயக்கி வருகிறார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்.
மோடிக்கு எதிரான அலை
தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையே வீசுகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லை. அரசு செயலிழந்து உள்ளது. தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவினர் அ.தி.மு.க.வை மிரட்டி 234 தொகுதிகளில் 100 தொகுதிகளையாவது பெற்று போட்டியிடுவார்கள். சட்டமன்றத்தில் பா.ஜனதா இடம்பெறும் நிலை வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், ஒன்றிய பொறுப்பாளர் சுந்தர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜன், துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தூத்துக்குடியில் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சீமான் கோபம் சரிதான்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்று எந்த இடத்திலும் விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது இல்லை. அதேபோன்று இந்திய அரசாங்கத்தை அல்லது காங்கிரஸ் கட்சியை, மாவீரர்நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்தது இல்லை. ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கனவே பலரும் கூறி இருக்கிறார்கள். அந்த பழி விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்பட்டு விட்டது. இதுதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களின் கருத்து. பிரபாகரனின் கருத்தும் ஆகும். இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்லுவது ஈழத்தமிழர்களின் மீது உள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.
இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. இந்திய அமைதிப்படையின் மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, இந்திய அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று தெரிவித்தார். அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியது தான், சரிதான். ஆனாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story