சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு


சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 3:45 AM IST (Updated: 17 Oct 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே மாமந்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள பள்ளிக்கூட சாலை, மாமந்தூர்-அரும்பட்டு செல்லும் சாலை, மாரியம்மன் கோவில் தெரு பகுதி சாலைகளை கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிவர பராமரிக்கவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இந்த சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். மேலும் குண்டும், குழியுமான சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சேறும், சகதியுமாக உள்ள சாலைகளில் நாற்று நட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் மாமந்தூர்-அரும்பட்டு சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், சாலைகளின் இருபுறங்களிலும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கவேண்டும் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story