108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் - கலெக்டர் தகவல்


108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 3¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை சார்பில் ‘நல்ல சமாரியன் நாள்‘ கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டு, சிறந்த சமாரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்து 122 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்து உள்ளனர். இதில் கர்ப்பிணி தாய்மார்களின் பிரசவம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் பயனடைந்தும், சாலை விபத்துக்களில் 46 ஆயிரத்து 280 பேர் காப்பாற்றப்பட்டும் உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு உயிரை காப்பாற்ற நல்ல மனம் இருந்தால் போதும். இன்றைய காலத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். உள்பட பல்வேறு உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவசர கால உதவியின் தேவை அனைவருக்கும் பொதுவாகும். இதன் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சேவை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மதிப்புமிக்க பணியை செய்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி ஒரு உயிரை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (நலப் பணிகள்) சுகந்தி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மீரா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார், 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேற்பார்வையாளர் ராஜேஷ்குமார், மாவட்ட மேலாளர் கண்ணன், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story