அத்திக்கடவு-அவினாசி 2-வது திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள் சங்கம் கோரிக்கை
அத்திக்கடவு-அவினாசி 2-வது திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை,
அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை அருகே பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, அன்னூர், திருப்பூர், அவினாசி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் காரமடை முதல் மடையாகவும், பெருந்துறை கடைமடை பகுதியாகவும் இருந்தது.
இதில் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து குழாய் மூலம் கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு கடந்த ஆண்டு ரூ.1,562 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்த திட்டத்தில் காரமடை, நாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய 3 ஒன்றியங்கள் விடுபட்டன. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அத்திக்கடவு-அவினாசி 2-வது திட்டத்தில் காரமடை உள்பட விடுபட்ட பகுதிகள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் இந்த திட்டம் குறித்து காரமடை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதாவது:-
அத்திக்கடவு-அவினாசி 2-வது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் அறிவித்து ஓராண்டு ஆகியும் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மக்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுக்காவிட்டால், அத்திக்கடவு திட்டத்தை பெற அவினாசி மக்கள் போராட்டம் செய்தது போல விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி இந்த திட்டத்துக்காக போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி விவசாயிகள் சங்கத்தினரும், வாலிபர்களும் கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொரு விவசாயிக்கும் திட்டம் பற்றி துண்டு பிரசுரம் வழங்கி போராட்டத்தில் குடும்பத்துடன் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வருகிறோம். அனைவரிடமும் ஆதரவு திரட்டிய பின்னர் போராட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story