டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:30 AM IST (Updated: 18 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாணவ-மாணவிகள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் கலெக்டர், மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாக கட்டிடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதா? என்பதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக இலவங்கார்குடி ஊராட்சி அரசு குடியிருப்பு வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

421 பேருக்கு நோட்டீஸ்

மழை காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் ஏற்படக்கூடும். வீட்டை சுற்றி இருக்கும் தேங்காய் சரடுகள், ஓடுகள், பயன்படாத பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், டயர்கள், வாட்டர் டேங்குகள் போன்றவற்றில் தேங்கும் மழை தண்ணீரில் இருந்துதான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பயன்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளிச்சீங் பவுடர் போட்டு நன்றாக கழுவி, கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருந்ததாக இதுவரை 421 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தங்களது வீடுகளில் மழைநீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான கமல் கிஷோர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், வசந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மனோ‌‌ஷ்குமார், தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story