சுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு


சுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 17 Oct 2019 10:45 PM GMT (Updated: 17 Oct 2019 7:10 PM GMT)

சுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கீச்சாங்குப்பம் கிராமத்தில் தேங்கியுள்ள குப்பைகளை தூய்மை காவலர்கள் அப்புறப்படுத்துவதையும், டெங்கு விழிப்புணர்வு முகாம்களையும் அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டுள்ள வானிலை முன் அறிவிப்பு மையத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தாழ்வான பகுதிகள்

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிரு‌‌ஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை தொடர்பாக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4 ஆயிரத்து 399 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டம் தோறும் துறைசார்ந்த அலுவலர்கள் அடங்கிய 639 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராமங்கள் வாரியாக முதலுதவி வழங்கிடவும், மாவட்ட நிர்வாகத்துடன் தகவல் தொடர்பில் இருக்கும் வகையில் 11 ஆயிரத்து 812 பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள், 29 ஆயிரத்து 226 ஆண் முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அபராதம்

கடலோர மாவட்டங்களில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வண்ணம் பராமரிக்கப்படும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குறும்படங்கள்

முன்னதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மின்னணு திரை வாகனத்தின் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிரு‌‌ஷ்ணன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பேரிடர் பாதுகாப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த், வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செபஸ்டியம்மாள், வெற்றிச்செல்வன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story