தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 74 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக மழை அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 74 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 7:18 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. அதிக பட்சமாக அதிராம்பட்டினத்தில் 74 மி.மீ. மழை பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை முதலே மழை பெய்தது.

பின்னர் மாலையில் பலத்த மழை கொட்டியது. இரவிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் வல்லம், நெய்வாசல் தென்பாதி, அணைக்கரை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து.

மழை அளவு

நேற்று காலையில் மழை பெய்யவில்லை. ஆனால் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி முதல் லேசான தூறலுடன் மழைபெய்தது. பின்னர் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 74, வல்லம் 66, அணைக்கரை 61, நெய்வாசல் தென்பாதி 46, பட்டுக்கோட்டை 46, மதுக்கூர் 27, ஈச்சன்விடுதி 27, திருவையாறு 24, மஞ்சளாறு 23, திருக்காட்டுப்பள்ளி 15, பூதலூர் 15, குருங்குளம் 14, அய்யம்பேட்டை 14, பாபநாசம் 12, திருவிடைமருதூர் 12, கும்பகோணம் 10, ஒரத்தநாடு 10, தஞ்சை 7, கல்லணை 5.


Next Story