தாராபுரத்தில், நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
தாராபுரத்தில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம்,
தாராபுரம் சின்னக்காளியம்மன் கோவில் அருகே உள்ள, பீமராயர் மெயின் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரமணி (வயது 64). இவர் நேற்று மதியம் 1 மணி அளவில், அவருடைய வீட்டிலிருந்து புறப்பட்டு, அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
சர்ச்ரோட்டிலிருந்து சின்னக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லும் ரோட்டில், விநாயகர் கோவில் அருகே அவர் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் ரமணி அருகே வந்ததும், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டதை கேட்டு, அருகே இருந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில், மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்ற மர்ம ஆசாமிகளை, பொது மக்களால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. பின்னர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிறகு அந்த பகுதியில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து, ரமணியை கண்காணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆசாமி ஹெல்மெட் அணிந்திருப்பதும், பின்னால் அமர்ந்திருந்த ஆசாமி ஹெல்மெட் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ரமணியிடம் நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் உடனடியாக நகர் பகுதி முழுவதும் வாகனச் சோதனை நடத்தினார்கள். நகர எல்லையில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளிலும் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
பட்டப்பகலில் நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story