விடிய, விடிய கொட்டித்தீர்த்தது, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மி.மீ மழை - திண்டுக்கல்லில் மின்சாரம் துண்டிப்பு


விடிய, விடிய கொட்டித்தீர்த்தது, மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மி.மீ மழை - திண்டுக்கல்லில் மின்சாரம் துண்டிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 3:30 AM IST (Updated: 18 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மி.மீ. மழை பெய்தது. விடிய, விடிய பெய்த இந்த மழை காரணமாக திண்டுக்கல்லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் காலையில் இருந்தே வானில் மேக கூட்டங்கள் திரண்டன. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஆனால் பலத்த மழையாக மாறவில்லை. சாரல் மழையாகவே விடிய, விடிய கொட்டித்தீர்த்தது.

மழை காரணமாக திண்டுக்கல் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருமலைசாமிபுரம், நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் சில மணி நேர இடைவெளியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் இரவில் தூக்கமின்றி தவித்தனர்.

அதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம் என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 375.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதில் திண்டுக்கல்லில் 22.4 மில்லி மீட்டரும், பழனியில் 14 மில்லி மீட்டரும், கொடைக்கானலில் 103 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மாவட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆத்தூர் காமராஜர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 23.5 அடி உயரம் கொண்ட ஆத்தூர் காமராஜர் அணையில் கடந்த சில மாதங்களாக நீர்மட்டம் 1 அடிக்கும் குறைவாகவே இருந்து வந்தது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கும் நீர்வரத்து இல்லை. இதனால் திண்டுக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற கலக்கத்தில் பொதுமக்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 4 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 கன அடி நீர்வரத்து உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆத்தூர் காமராஜர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் அணை அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு நீர்மட்டம் உயரும் பட்சத்தில் விவசாய பாசனம், குடிநீர் தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் என்றார். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story